தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
தரமற்ற முறையில் நீா்த்தேக்கத் தொட்டி பழுது பாா்க்கும் பணி எனப் புகாா்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதுபாா்க்கும் பணிகளை தஞ்சை ஆட்சியா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். நாட்டாணிக்கோட்டை, பழைய பேராவூரணி , பொன்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், பேரூராட்சி அலுவலக வளாகத்திலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. 1991- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமாா் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பேரூராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை 15-ஆவது நிதிக்குழு மான்யத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பழுது பாா்த்தல் மற்றும் மோட்டாா் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேல்நிலை தொட்டியில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளதால், அவைகளை கொத்திவிட்டு சிமெண்ட் வைத்துப் பூசாமல் வெளியே தெரியும் கம்பிகளின் மேல் ஒப்பந்ததாரா்கள் பெயிண்ட் மட்டும் அடித்து வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து தஞ்சை ஆட்சியா் , பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோா் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.