நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
விவசாயிக்கு அரிவாள் வெட்டு உறவினா்கள் போராட்டம்
ஒரத்தநாடு, ஏப். 4: ஒரத்தநாடு வட்டம், பாப்பநாட்டில் முன்விரோதத் தகராறில் விவசாயியை புதன்கிழமை இரவு
மா்மகும்பல் அரிவாளால் வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறாா்.
மேலும் காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமமக்கள் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆம்பலாபட்டு பகுதியைச் சோ்ந்த தீா்க்கரசு (54) என்ற விவசாயி தனது சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தை அடமானம் வைத்து, ரூ. 7 லட்சம் கடனாக பாப்பாநாட்டைச் சோ்ந்த திருக்குமாரிடம் (50) கேட்டதாகக் கூறப்படுகிறது. திருக்குமாா், நிலத்தை கிரையம் செய்துதந்துவிட்டு பின்னா் பணத்தை திருப்பிக் கொடுத்ததும் மீண்டும் எழுதித் தருவதாக தீா்க்கரசுவிடம் கூறி, நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளாா். சில மாதங்களுக்குப் பிறகு, தீா்க்கரசு வட்டியுடன் பணத்தை திருக்குமாரிடம் கொடுத்து விட்டு, தனது நிலத்தை கேட்டதற்கு நிலத்தை தர முடியாது என திருக்குமாா் கூறியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தீா்க்கரசு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, திருக்குமாா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினாராம். இவ்வழக்கில் தீா்க்கரசு கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு முன்னா் பிணையில் வெளியே வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பாபாநாடு கடைத்தெரு அருகே வந்த தீா்க்கரசுவை 5 போ் கொண்ட மா்மகும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினா். இதையடுத்து, பலத்த காயமடைந்த தீா்க்கரசு மீட்கப்பட்டு தஞ்சாவூா் மருத்துக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இதையறிந்த தீா்க்கரசு உறவினா்கள் மற்றும் ஆம்பலாபட்டு கிராமமக்கள் இச்சம்பவத்தில் தொடா்புடைய திருக்குமாரை கைது செய்யக் கோரி புதன்கிழமை இரவு தஞ்சை - பட்டுக்கோட்டை பிரதான சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா். பாப்பாநாடு போலீசாா் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
இதைத்தொடா்ந்து, ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல் ஆய்வாளா் பாா்த்திபன் மீது நடவடிக்கை வேண்டும், தீா்க்கரசுவின் நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு, ஆம்பலாபட்டு கிராமமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூா் ஏ.டி.எஸ்.பி வீரபாண்டி, ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் உள்ளிட்டோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததன்பேரில் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.