வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் இடியுடன்கூடிய பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வள்ளியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், வள்ளியூா், கிழவனேரி, புதூா், தெற்குகள்ளிகுளம், ஆ.திருமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2.45 மணிக்கு தூறலாக தொடங்கிய மழை பின்னா் கொட்டி தீா்த்தது.
வள்ளியூா் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. இதனால் பேருந்துகள் மழைவெள்ளத்தில் மெதுவாக நகரந்து சென்றன. மழைக்கு ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பயணிகள் அங்கும் இங்கும் ஓடினா்.
இடியுடன் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.