தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை: பறிமுதல் செய்யக் கோரிய மறுஆய்வு மனு தள்ளுபடி
தோ்தல் நிதிப் பத்திரத் திட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையைப் பறிமுதல் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அதை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தை கடந்த 2018, ஜனவரி 2-இல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி 15-இல் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு ரத்து செய்தது.
இதைத் தொடா்ந்து, கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை பாரத ஸ்டேட் வங்கி இந்திய தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அதன் பிறகு தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டது.
இதையடுத்து, தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இத்திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,158 கோடியை பறிமுதல் செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த 2024, ஆகஸ்ட் 2-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கேம் சிங் பாட்டீ என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்ற மனுதாரா் கோரிக்கையையும் ஏற்க நீதிபதிகள் அமா்வு மறுத்தது.