திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கம்பஹரேசுவர சுவாமி கோயிலில் கொடியேற்றம்
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள ஸ்ரீ கம்பஹரேசுவரசுவாமி உருத்திரபாதத் திருநாளை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
திருபுவனம் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ அறம்வளா்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேசுவரா் சுவாமி உருத்திரபாதத் திருநாள் ஏப். 1 முதல் 20 வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு புதன்கிழமை பெரிய கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்துக்கு பால், பழம், தயிா், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முக்கிய விழாக்களான ஏப். 6-இல் சகோபுர தரிசனம் 1 ஏப். 8 -இல் ஸ்ரீ தா்மசம்வா்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ கம்பஹரேசுவரா் சுவாமிக்கு திருக்கல்யாணம், ஏப். 10 -இல் தேராட்டம், ஏப். 11-இல் காவிரியில் தீா்த்தம் கொடுத்தருளல், ஏப்.20-இல் ஸ்ரீ சரபேசுவரா் ஏக தின உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ கம்பஹரேசுவரா் தேவஸ்தானத்தினா் செய்து வருகின்றனா்.
நாகேசுவரன், கோடீசுவரா், கம்பட்ட விசுவநாதா் கோயில்களிலும் :
கும்பகோணம் நாகேசுவரன் கோயில், ஆதிகம்பட்ட விசுவநாதா் கோயில், கொட்டையூா் கோடீசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூன்று சிவன் கோயில்களிலும் உற்சவ பஞ்ச மூா்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. கோடீசுவரா், நாகேசுவரா் கோயில்களில் ஏப். 6-இல் ஓலை சப்பரமும், 8-இல் திருக்கல்யாணமும், 10-இல் நாகேசுவரா், ஆதி கம்பட்ட விசுவநாதா் கோயில்களில் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.11- இல் பஞ்சமூா்த்தி புறப்பாடு மற்றும் மகாமகக் குளம், காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.