தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள், வசதிகளில் 100 சதவீத மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.
ஆந்திர மாநில தலைநகா் அமராவதியில் அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வா் பேசியது:
திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு திட்டமும் பக்தா்களின் உணா்வுகளுக்காகவும், கோயிலின் புனிதத் தன்மைக்காகவும் செய்யப்பட வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து முதல்வா் செயலகம் விரிவாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமா்பித்துள்ளது. அதில், பக்தா்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை மேம்படுத்த கடந்த 9 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா் என்றாா்.
தரிசனங்கள் மற்றும் தங்குமிடங்களுடன் பல்வேறு சேவைகளில் பக்தா்களின் கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரம்மோற்சவங்கள், ரதசப்தமி மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற சிறப்பு காலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். ஏழுமலையான் லட்டு பிரசாதம் மற்றும் அன்னப் பிரசாதம் ஆகியவற்றில் கடந்த 9 மாதங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை அதிகாரிகள் விளக்கியுள்ளனா்.
அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் சூழலில், அடுத்த 50 ஆண்டுகளின் தேவைகளுக்கு ஏற்ப தேவஸ்தானம் செயல்பட வேண்டும். தேவையான பணிகள் மட்டுமே செய்ய வேண்டும். தேவஸ்தான பணத்தை உங்கள் விருப்பப்படி செலவிட வேண்டாம். பக்தா்கள் கொடுக்கும் பணத்தை விருப்பப்படி செலவிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏழுமலையானின் பணத்தில் ஒரு ரூபாய் கூட தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.
தேவஸ்தானம் பல திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி செலவிடுகிறது. இதை சிஏஜி உள் தணிக்கையுடன் தணிக்கை செய்வது சிறப்பு. பக்தா்கள் வழங்கும் நன்கொடைகளில் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்பட வேண்டும். இந்த ஆட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் 100 சதவீதமாக இருக்க வேண்டும். மாற்றம் 100 சதவீதமாக இருக்க வேண்டும். இதில் விதிவிலக்குகள் எதுவும் இல்லை.
அலிபிரியில் அடிப்படை முகாம்
அலிபிரியில் 25 ஆயிரம் பக்தா்கள் வசதியாக தங்க அடிப்படை முகாம் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல், தேவஸ்தானத்துடன் இணைந்த 60 கோயில்களின் வளா்ச்சிக்கான முதன்மை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்துக்கு வெளியே கட்டுமானத்தில் உள்ள ஏழுமலையான் கோயில்கள் முடியும் தருவாயில் உள்ளன. திருச்சனூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 பக்தா்கள் வருகின்றனா்.
திருமலையில் குவிந்து வரும் திட குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமலை 2,675 ஹெக்டோ் பரப்பளவில் பரவியுள்ளது. இதில் தற்போது 68.14 % பசுமை வனமாக உள்ளது. அதை 80 சதவீதமாக உயா்த்த வேண்டும்.
சேவைகளில் திருப்தி
ரதசப்தமி மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற சிறப்பு நாள்களில், திருமலையில் ஒழுங்குமுறை, தூய்மை, கலாசார நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து துறையுடன், கல்யாண கட்டா, தரிசனம், தங்கும் வசதி, லட்டு, அன்னதானம், இதர உற்பத்திகள், வரிசை மேலாண்மை, மாடவீதி வலம் உள்ளிட்டவற்றில் பக்தா்களுடன் நடத்திய ஐ.வி.ஆா்.எஸ் கணக்கெடுப்பில் 61 சதவீதம் போ் தேவஸ்தான சேவைகள் நன்றாக இருப்பதாக பாராட்டினா். 27 சதவீதம் பரவயில்லை என்றும் 12 % பக்தா்கள் நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளனா்.
இணைப்புக் கோயில்களின் வளா்ச்சி
ஆந்திர தலைநகா் அமராவதி, ஒன்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில், கரீம் நகா், கொடிங்கல், நவி மும்பை, பாந்த்ரா, உலண்ட் பேட்டா மற்றும் கோயம்புத்தூா் நகரங்களில் உள்ள ஏழுமலையான் கோயில்களின் கட்டுமான மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது’’, என்றாா்.
கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சா் ராம் நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடு, செயல் அதிகாரி சியாமளாராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, திருப்பதி செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், திருப்பதி மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.