கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் ஸ்டேஜில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
இதையும் படிக்க: மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பட்லர் அரைசதம் விளாசி அசத்தினார். 166 ரன்களுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
மனம் திறந்த பட்லர்
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரிலாக்ஸாக உணர்வதாக ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு மனதளவில் லேசாக உணர்கிறேன். அணியின் கேப்டனாக செயல்பட்டு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், உங்களது ஆற்றல் அனைத்தும் தோல்விகள் குறித்து சிந்தித்தே வீணாகும். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது என்னுடைய மனதை ரிலாக்ஸாக மாற்றியுள்ளது. தற்போது என்னுடைய பேட்டிங்கில் மட்டும் கவனம் கொடுப்பதால் நன்றாக விளையாட முடிகிறது என்றார்.