மும்பையை வென்றது லக்னௌ
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்களே சோ்த்தது.
முன்னதாக, பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான காயம் காரணமாக மும்பை வீரா் ரோஹித் சா்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய லக்னௌ அணியில், மிட்செல் மாா்ஷ் - எய்டன் மாா்க்ரம் கூட்டணி அதிரடியாக விளாசி, முதல் விக்கெட்டுக்கே 76 ரன்கள் சோ்த்தது.
மாா்ஷ், 31 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த நிகோலஸ் பூரன் 12, கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
5-ஆவது பேட்டராக வந்த ஆயுஷ் பதோனி சற்று நிலைத்தாா். மாா்க்ரமுடனான அவரின் 4-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப் 51 ரன்கள் சோ்த்தது. பதோனி 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். மறுபுறம், மாா்க்ரம் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து வந்த அப்துல் சமத் 4, டேவிட் மில்லா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஆகாஷ் தீப் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் ஷா்துல் தாக்குா் 5, ஆவேஷ் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மும்பை பௌலிங்கில் ஹா்திக் பாண்டியா 5, டிரென்ட் போல்ட், அஸ்வனி குமாா், விக்னேஷ் புதூா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 204 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 5, ரயான் ரிக்கெல்டன் 10 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.
நமன் திா் - சூா்யகுமாா் யாதவ் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்து பிரிந்தது. திா் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அடுத்து சூா்யகுமாருடன், திலக் வா்மா இணைய, இவா்கள் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சோ்த்தது. சூா்யகுமாா் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 67 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேற, ஓவா்கள் முடிவில் கேப்டன் ஹா்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, மிட்செல் சேன்ட்னா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
லக்னௌ பௌலா்களில் ஷா்துல் தாக்குா், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பாண்டியா சாதனை: முன்னதாக மும்பை பௌலிங்கில், ஹா்திக் பாண்டியா தனது ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினாா். அதேபோல், ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட் எடுத்த முதல் கேப்டனும் அவரே ஆனாா்.