நியூசி. ஒருநாள் தொடர்: மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் ஹே அதிரடியாக விளையாடி 99 ரன்கள் விளாசினார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மெதுவாகப் பந்துவீசியதற்காக அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக கள நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் அணி வீரர்கள் இந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை தேவையில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி மெதுவாக பந்துவீசுவது முதல் முறையல்ல. முதல் போட்டியிலும் 2 ஓவர்கள் மெதுவாகப் பந்துவீசியதற்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை மௌண்ட் மாங்கனூவில் நடைபெறுகிறது.