மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை மும்பை கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்குமார் யாதவ் இடம்பெற்று விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?
மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
மும்பை அணியில் உள்ள வீரர்கள் சிலருடன் இணைந்து கோவா அணிக்கு சூர்யகுமார் யாதவ் செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மும்பை அணியை விட்டு சூர்யகுமார் யாதவ் எங்கும் செல்லவில்லை எனவும், மும்பை அணிக்காக விளையாடுவதையே அவர் விரும்புகிறார் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க செயலர் அபய் ஹதாப் கூறியதாவது: மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சூர்யகுமார் யாதவிடம் பேசினார்கள். அவரிடம் பேசிய பிறகு, சமூக வலைதளங்களில் பரவியது வதந்தி என்பதும், முழுவதும் ஆதாராமற்ற செய்தி என்பதையும் உறுதிப்படுத்தினோம். மும்பை அணிக்காக விளையாடுவதில் சூர்யகுமார் யாதவ் மிகுந்த பெருமைப்படுகிறார். அதனால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதையும் படிக்க: கோப்பையை வெல்வது மட்டும் மீதமிருக்கிறது: நிதீஷ் குமார் ரெட்டி
முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.