உலகின் மிகச் சிறிய pacemaker; குழந்தைகளின் இதயத்தை காப்பாற்றப் போகும் உன்னத கருவி!
அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய பேஸ்மேக்கரை கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை விட சிறியது. உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்குள் சென்றுவிடக் கூடியது!
Pacemaker
இதனை தமிழில் இதய முடுக்கி எனக் கூறலாம். இது இதய துடிப்பை ஒழுங்குபடுத்த பயன்படும் ஒரு மருத்துவக் கருவி.
இதனை மார்பு பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்துவர். இது ஈய கம்பிகள் மூலம் இதயத்துக்கு தொடர்ந்து மின் தூண்டல்களை வழங்கி, அது சீராக துடிப்பதை உறுதி செய்யும்.

ஒழுங்கற்ற அல்லது மெதுவான இயத துடிப்பு உள்ளவர்களுக்கு (arrhythmias) இது மிக முக்கியமானது. குறைவான இதயதுடிப்பு, இதய அடைப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.
குழந்தைகளைக் காப்பாற்றும்
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள பேஸ்மேக்கரை உலகிலேயே மிகச் சிறியது எனக் கோருகின்றனர்.
இந்த சிறிய கருவியை தற்காலிகமாக இதய துடிப்பு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தலாம். உதாரணமாக இதய பிரச்னையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேஸ்மேக்கர்களுக்கு வயர்களும் அதன் தேவை முடிந்த பிறகு வெளியில் எடுக்க அறுவை சிகிச்சையும் தேவை. ஆனால் இந்த பேஸ்மேக்கர்கள் அதன் பயன்பாடு முடிந்த உடன் தானாக உடலில் கரைந்துவிடும்.

இந்த கருவியை உருவாக்கும் குழுவை தலைமை தாங்கிய உயிரி மின்னணுவியலின் முன்னோடி ஜான் ஏ ரோஜர், இது இதய பிரச்னைகளுடன் பிறக்கும் 1% குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
7 நாட்களில் குழந்தைகளின் இதயம் தானாக சரியாகிவிடும். அதுவரை இதனைப் பொருத்திக்கொள்ளலாம்.
எப்படி செயல்படுகிறது?
இந்தக் கருவி மிகவும் சிறியது, வயர் அற்றது, சௌகரியமானது. இந்த கருவி உள்ளே இருக்கும்போது வெளியில் ஒரு ஒட்டும் கருவியைப் பொருத்திக்கொள்ள வேண்டும்.
அந்த கருவி இதய துடிப்பை கண்காணிக்கும். எப்போதெல்லாம் சீரற்ற இதயத்துடிப்பை அறிகிறதோ, அப்போதெல்லாம் வெளிச்சம் வீசும். இந்த வெளிச்சம் உள்ளே இருக்கும் பேஸ் மேக்கரை ஆக்டிவேட் செய்து இதயத்துடிப்பை சீராக்கும்.

முந்தைய பேஸ்மேக்கர்கள் ரேடியோ சிக்னல்களால் இயக்கப்பட்டன. இது வெளிச்சம் மூலம் இயங்குவதனால் மிகச் சிறியதாக உருவாக்க முடிந்துள்ளது.
இந்த பேஸ்மேக்கரில் உள்ள பேட்டரி உடல் திரவங்களை வைத்து மின்னாற்றலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு வயர்கள் தேவையில்லை.
இந்த கருவியை மிருகங்களிலும், தானமாக பெறப்பட்ட மனித இதயங்களிலும் பயன்படுத்தி சோதித்துள்ளனர். இது இதயத்துடிப்பை சீராக்குவதில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறியுள்ளனர்.
எதிர்கால பயன்பாடுகள்
இந்த பேஸ்மேக்கர் மருத்துவ தொழில்நுட்பத்தில் கேம்-சேஞ்சராக இருக்கும் என்கின்றனர். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கு இதய சிகிச்சைகளின்போதும் இதைப் பயன்படுத்தலாம்.
அல்லது, ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை இதயத்தின் வெவ்வேறு இடங்களில் பொருத்தி முந்தைய பேஸ்மேக்கரை விட சிறப்பான பலனைப் பெறலாம்.

மேலும் செயற்கை இதய வால்வுகளிலும் இதைப் பயன்படுத்தி ஆபத்தைக் குறைக்கலாம் என்கின்றனர். இதன் சிறிய உருவம் பல கதவுகளை திறந்துள்ளது.
இதயத்தில் மட்டுமல்லாமல் நரம்பு, எலும்பு மற்றும் வலியை குணப்படுத்துவதிலும் இதைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
இன்னும் சில சோதனைகளுக்குப் பிறகு இந்த பேஸ்மேக்கர் மருத்துவ உலகில் பல உயிர்களைக் காக்கும் வரவாக பயன்படுத்தப்படும் என்கின்றனர்.