ஜெய்ஸ்வால், ரியான் பராக் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
ஜெய்ஸ்வால், ரியான் பராக் அதிரடி
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 89 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ரியான் பராக் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். ரியான் பராக்கும் அதிரடியாக விளையாடினார்.
தொடக்கம் முதலே அதிரடியில் அசத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரியான் பராக் 25 பந்துகளில் 43 ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஷிம்ரன் ஹெட்மேயர் 12 பந்துகளில் 20 ரன்களும் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். துருவ் ஜுரெல் 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ யான்சென் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.