சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் காலமானார்!
பிரபல சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் மாரடைப்பால் நேற்று(ஏப். 5) காலமானார்.
சென்னை தியாகராய நகரில் தனது குடும்பத்துடன் வசிந்து வந்த ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
சின்ன திரையில் கே. பாலச்சந்தர் இயக்கிய சஹானா தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீதர். அண்மையில், வள்ளியின் வேலன் என்ற தொடரில் நடித்து வந்தார். முன்னதாக, தாமரை, சித்தி - 2 உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் ஒய்.ஜி. மகேந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பெரிய திரையில் அழியாத கோலங்கள், விஐபி, ராஜவம்சம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீதர் மறைவு திரையுரலக பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.