7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!
``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் தாகூர் எம்.பி
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி எம்.பி.யை கூட கூட்ட நிறைவுநாளில் பேசுவதற்குதான் சில நிமிடங்கள் வாய்ப்பளித்தனர்.

வக்புவாரிய சட்ட திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் சரத்துகளுக்கு எதிரானதாகயிருக்கிறது. வக்பு நிலங்களை பிடுங்கி அதை பெரும் பணக்காரர்களான அம்பானிக்கும், அதானிக்கும் கொடுப்பதுதான் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திட்டம். இந்தநிலை இன்று இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல, நாளை கிறிஸ்தவர்களுக்கும் நடக்கலாம்.
மதுரை விமான நிலையம்
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஓட்டுநர் தொழிற் பயிற்சி மையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறேன். அதேபோல உலகளாவிய சுற்றுலாத்தலங்களை இணைக்கும் விமான நிலைய அட்டவணை பட்டியலில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அட்டவணைப்படுத்தப்பட்டால் ஆசிய கண்டத்தில் உள்ள சர்வதேச நாடுகளில் இருந்தும் விமானங்கள் மதுரைக்கு வந்து செல்ல முடியும்.
இதன் மூலமாக மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடையும். கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மத்திய பா.ஜ.க அரசு இனிமேலாவது மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சீமானும், எடப்பாடியும்..
அரசியலில் சீமானும், அ.தி.மு.க. எடப்பாடியும் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் சதுரங்க ஆட்டம் போல பேசிவருகிறார். அவர் சாமானியர்களை பற்றி யோசிக்கவில்லை. அவருக்கு நேரம் இருந்தால் சாமானியர்களை சந்தித்து பேச சொல்லுங்கள்.

ஜியோ - பிஎஸ்என்எல்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி கூறுவதெல்லாம் ஆகாத கதைகள். ஜியோ நிறுவனத்திடமிருந்து ரூ.1735 கோடியை கடந்த 10 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் வசூல் செய்யாமலேயே இருந்தது. அந்த வகையில் பார்த்தால் இந்த அரசாங்கம் அரசாங்கமாக செயல்படுகிறதா அல்லது அதானிக்கும், அம்பானிக்குமான நிறுவனமாக செயல்படுகிறதா? என்பதை முதலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லட்டும்.
100 நாள் வேலை திட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டுவது, திட்டமிட்டு இந்த 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே. இந்த திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் உள்ள பயனாளர்களுக்கு 54 நாள்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. அந்த வேலையையும் கூட அவர்களிடமிருந்து பறித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்திலிருந்து 100 நாள் வேலை திட்டம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட 100 நாள் வேலை திட்டம் ஒரு ஆகாத திட்டமென்றே பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழகத்தில் உள்ள சிறப்பான உள்ளாட்சி கட்டமைப்புகளின் காரணமாக 100 நாள் வேலை திட்டம் இன்று சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எந்த சிறு தவறும் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டுமே தவிர, இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான வேலைகளை செய்யக்கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நிறுத்த துடிக்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. அரசு இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற பணம் நேரடியாக சென்று சேர்கிறது. இதை நிறுத்த பார்க்கிறார்கள்.

இந்த விஷயத்தில் மிகப்பெரிய அடி வாங்க போவது அ.தி.மு.க. தான். பாஜக எனும் கூட நட்புடன் இணைந்து அழியப் போகிறார்கள். பா.ஜ.க. செய்கிற வேலைகளுக்கு அ.தி.மு.க. துணை நிற்பது தமிழக மக்களுக்கு கட்சி செய்கின்ற துரோகம்.
தேர்தல் கூட்டணி:
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான கூட்டணி என மூன்று வித கூட்டணிகள் தேர்தலில் களம் காணப்போகிறது.
மக்கள் எந்த கூட்டணியை ஆதரிப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆகவே தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்கப் போகிறதா? அல்லது மோடி, அமித்ஷா ஆட்சியை விரும்பி மக்கள் வாக்கு செலுத்தப் போகிறார்களா? என்றே அமையப்போகிறது.

அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் பா.ஜ.க.வோடு சேரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அ.தி.மு.க.வானது தற்போது அமித்ஷா தி.மு.க.வாக செயல்படுகிறது. ஆகவே அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர வேண்டுமா?, வேண்டாமா? என்பதை அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. அண்ணாமலையை ஏற்கெனவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவில் பா.ஜ.க. உள்ளது.
ஆகவே கூட்டணி பற்றி முடிவு செய்யப்போவது மத்திய அமைச்சர் அமித்ஷாதான். நீட் தேர்வு விலக்கு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இண்டியா கூட்டணி கொடுத்த வாக்குறுதி என்னவென்றால், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பத்திற்குட்பட்டு நடத்தப்படும் என்ற கூறப்பட்டது.
அதன்படி பார்க்கும்போது ராகுல் காந்தி எம்.பி. இந்தியாவின் பிரதமராக வருவதற்கு 2029ம் ஆண்டு வரை காத்திருக்கக்கூடிய சூழல் இருப்பதால் அதுவரை முயற்சி செய்யாமல் இருப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் தருகிற வகையில் சட்ட மசோதாக்கள் மூலமாகவும், பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூலமாகவும் இந்த பா.ஜ.க. அரசை பணிய வைப்பதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்க வேண்டும். அதை தவிர்த்து தேர்தல் நாடகம் என்று ஒப்பிட்டு பேசுவது தவறானது.
அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றுமே கூட்டணி ஆகிவிட்டனர். இந்த மூன்று கட்சிகளும் ஒரே கட்சியாக மாறிவிட்டது. ஆகவே அவர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுக்க முடியாது.

கச்சத்தீவு பிரச்னையை தி.மு.க. முதல் முதலாக கையிலெடுத்து பேசுகிறது. தேர்தலுக்கு தேர்தல் கச்சத்தீவை பற்றி பேசுபவர்கள் அ.தி.மு.க.வினர் தான். அவர்களைப் பொறுத்தவரை இலங்கைக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி திரும்பி வரும் போது கட்சத்தீவை மீட்டு கையோடு கொண்டு வந்துவிடுவார் என்றே எண்ணியிருப்பார்கள் போல. ஆனால் இலங்கையில் சென்று திரும்பும் பிரதமர் மோடி வெறும் கைகளோடு தான் திரும்புகிறார். இந்த விஷயத்தில் தோல்வியை தழுவிய ஒரு பிரதமராக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்" என பேசினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
