IPL விதிகள் மீறல்; சம்பளத்தில் 25 சதவிகித அபராதம்; என்ன செய்தார் இஷாந்த்?
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷாந்த் சர்மாவுக்கு அவரது போட்டிக்கான சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று (ஏப்ரல் 6) நடந்த IPL போட்டியில், ஆர்டிகள் 2.2 கீழான முதல் நிலை குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் இஷாந்த் சர்மா.

அவரது விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. தகுதி இழப்பு புள்ளிகள் அதிகம் பெறுவது போட்டிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட வழிவகுக்கும்.
ஐபிஎல் நடத்தை விதிகள், ஆர்டிகள் 2.2 கிரிக்கெட் உபகரணங்கள், துணிகள் மற்றும் மைதான சாதனங்களை துஷ்பிரயோகம் செய்வதைக் குறிக்கிறது.
முதல் நிலை குற்றங்களைப் பொறுத்தவரை போட்டியின் நடுவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு.
இஷாந்த் சர்மா தான் விதி மீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதுடன், நடுவரின் முடிவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி நடந்தது என்ன?
நடப்பு ஐபிஎல்லின் 19வது போட்டி, குஜராத் டைடன்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் குஜராய் டைட்டன்ஸ் வீரர் இஷாந்த் சர்மா, நான்கு ஓவர்களில் 13.20 எகானமியில் 53 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட்களையும் எடுக்கத் தவறினார்.
தனது பந்து வீச்சால் திருப்தி அடையாத அவர், விரக்தியில் ஸ்டெம்பை எட்டி உதைத்தார். இதுதான் புகாராக எழுந்துள்ளது.
இதுவரை 2025 சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12.1 எகானமியில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக இல்லாதது ரசிகர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது.