'கில் அல்ல, என்னைப் பொறுத்தவரை இவர்தான் அடுத்த கேப்டன்' - யாரைக் கைகாட்டுகிறார் கபில்தேவ்
இந்திய அணி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கணத்திலேயே, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் ரோஹித் சர்மாவும், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
அப்போது, ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாதான் டி20 அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. அப்போதே, ஹர்திக் பாண்டியாவை ஏன் கேப்டனாக நியமிக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன.

ஆனாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் ஹர்திக் பாண்டியாவை துணைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.
தற்போது, ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வுபெறுவதாக இல்லையென்றாலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரையில் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாகச் சொல்ல முடியாததாக இருக்கிறது.
ஒருவேளை, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக விளையாடும் பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக அவர் ஓய்வுபெற்றால் துணைக் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் கேப்டனாவாரா, இல்லை வேறொருவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பது விவாதப்பொருளாக இருக்கிறது.
காரணம், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. இந்த நிலையில், ஒருநாள், டி20 அணி கேப்டன் பதவிக்கு தன்னுடைய சாய்ஸ் யார் என்தை இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊடக நிகழ்ச்சியொன்றில் பேசிய கபில்தேவ், "என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியாதான் எனது ஒயிட் பால் (ODI, T20) கேப்டன். கேப்டன் பதவிக்கு நிறைய போட்டியாளர்கள் இருந்தாலும் எனது விருப்பம் பாண்டியாதான்.
ஒப்பீட்டளவில் பாண்டியா இளமையாக இருக்கிறார். அடுத்தடுத்த ஐ.சி.சி தொடர்களுக்கு அவரை மையப்படுத்தி ஒரு அணியை உருவாக்க முடியும். அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஆடவேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாததால், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு நிறைய கேப்டன்கள் தேவைப்படும்" என்று கூறினார்.
ரோஹித்துக்குப் பிறகு இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்பது குறித்து உங்களுடைய கருத்தை கமெண்ட்டில் பதிவிடவும்!