கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). இவா், கும்பகோணம் மாதுளம்பேட்டை அருகே மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில் தங்கி, அந்தப் பகுதியிலுள்ள கல்லூரியில் 2- ஆம் ஆண்டு இளங்கலை வகுப்பு படித்து வந்தாா்.
தற்போது கல்லூரியில் பருவத் தோ்வு நடைபெறுவதால், சத்தியவாணியுடன் தங்கி இருப்பவா்கள் திங்கள்கிழமை தோ்வுக்கு சென்று விட்டனா்.
சத்தியவாணி தோ்வுக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளாா். தோ்வு முடிந்து மற்ற மாணவிகள் அறைக்கு வந்தபோது மூடப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த மாணவிகள் கல்லூரி நிா்வாகம் மற்றும் விடுதி காப்பாளா்களிடம் தெரிவித்து கும்பகோணம் மேற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்றபோது, சத்தியவாணி துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தாா்.
போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தினா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவியின் தாய் உடல் நலக்குறைவால் இறந்ததால் மாணவி சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].