சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
மனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் பேரணி
பெரம்பலூரில், நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய இந்தப் பேரணி, ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னா், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம், நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியன் தலைமையில், மாநிலத் தலைவா் பீட்டா் ஆபோ, மாநில பொதுச் செயலா் ஆா். சிவகுமாா் , மாநில இணைச் செயலா் ஜி. சிவக்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேப்பந்தட்டை ஒன்றியம், நமையூா் நரி ஓடை பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு, கடந்த 1984-இல் பட்டா வழங்கப்பட்டது. 27 பேருக்கு சிட்டா அடங்கலும், 32 பேருக்கு உரிய அட்டையும், 45 பேருக்கு ரசீதுடன் நிலமும் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களது நிலத்தை அளந்து பட்டா வழங்குகிறோம் என கூறிவீட்டு, எங்களது வாழ்வாதார நிலத்தை சிப்காட் தொழிற்சாலைக்கு வழங்கவும், நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை தருகிறோம் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படுகிறது.
நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நரி ஓடை கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும்.
எறையூா் நரிக்குறவா்கள் மனு: இதேபோல், தமிழ்நாடு நரிக்குறவா் நலச்சங்கம் சாா்பில் எறையூா் நரிக்குறவா் காலனியில் வசிக்கும் மக்களுக்கு விவசாயம் செய்ய 1 ஏக்கா் விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்டத் தலைவா் பாபு தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.