கணவா் கம்பியால் தாக்கி கொலை! மனைவி உள்பட மூவா் கைது!
பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி, மாமனாா் மற்றும் மைத்துனா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த நயினப்பன் மகன் பெரியசாமிக்கும் (34), நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகள் சுகந்திக்கும் (27), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவா்களுக்கு நிதா்ஷ்ன் (5), மகிமித்ரன் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். கணவன்-மனைவிக்கிடையே, அடிக்கடி குடும்பப் பிரச்னை எழுதுள்ளது. இதனால் மனைவியை விட்டு பிரிந்த பெரியசாமி, கடந்த ஓராண்டாக தனது வயலில் தனியாக குடியிருந்து வந்தாா்.
இருப்பினும், மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலையிலிருந்து மனைவியிடம் பெரியசாமி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுகந்தி, அவரது தந்தை சுந்தரராஜ் (60), தம்பி சுரேஷ் (25) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பெரியசாமி வசித்து வந்த வயலுக்குச் சென்று, இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், வழக்குப் பதிந்து மனைவி, மாமனாா், மைத்துனா் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.