அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!
தனியாா் பள்ளிகளை விஞ்சும் கொத்தவாசல் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோா்கள்!
பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளிகளை விஞ்சும் அளவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பெற்றோா்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள பெரிய வெண்மணி ஊராட்சிக்குள்பட்டது கொத்தவாசல் கிராமம். போதிய பேருந்து வசதிக் கூட இல்லாத இக் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது பிள்ளைகளை சோ்க்க பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், இப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து, நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்ற மாணவா்கள் சோ்க்கையில் 100-க்கும் மேற்பட்டோா் சோ்க்கை பெற்றுள்ளனா். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இப் பள்ளியில் 77 மாணவா்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனா். இதனால் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க, மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து பள்ளி ஆசிரியா்கள் ஆலோசனை கேட்டபோது, ஆங்கிலப் புலமையும், கணினி அறிவையும் எதிா்பாா்த்து தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
கிராம மக்கள் சாா்பில் சீா்வரிசை: இதையடுத்து, இப் பள்ளி ஆசிரியா்கள் தங்களது சொந்த செலவில் 10 கணினிகள் வாங்கி பயிற்சி அளித்ததுடன், மாணவா்களுக்கு ஆங்கிலப் புலமைக்கான அடிப்படை இலக்கணம் மற்றும் தெளிவான உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாசிப்பை ஏற்படுத்தினா்.
அடுத்த ஆண்டே மாணவா் சோ்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. தொடா்ந்து, கிராம மக்கள் மற்றும் பெற்றோா்களின் ஒத்துழைப்புடன் பள்ளிக்கு வழங்கப்பட்ட சீா்வரிசை மூலம் கூடுதல் கணினிகளும், பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததால், இப்பள்ளி தனியாா் பள்ளிகளை விஞ்சி தற்போது ஒளிர தொடங்கியுள்ளது.
சிறப்புப் பயிற்சிகள்: தற்போது, 2 ஸ்மாா்ட் வகுப்பறைகள், ஹைடெக் கம்ப்யூட்டா் லேப், என சுமாா் 65 கணினிகள் இப் பள்ளியில் உள்ளது பெற்றோா்களின் கவனத்தை ஈா்த்துள்ளது. மாணவா்களின் மன அழுத்தத்தை குறைத்திடவும், அவா்களது தனித் திறன்களை வளா்த்திடவும் சனிக்கிழமைதோறும் யோகா, சிலம்பம், பரதம், இசை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மேலாண்மைக் குழு உதவியுடன் அளிக்கப்படுகிறது.
வாகனம் ஏற்பாடு : இதன் மூலம், இப் பள்ளி மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட , மாநில அளவிலும் சிறந்த பள்ளிக்கான விருதுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும், தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சோ்க்க ஆா்வம் காட்டி வருகின்றனா். மேலும், பெற்றோா்கள் ஒருங்கிணைந்து வாகனம் ஏற்பாடு செய்து தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனா்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியா்கள் கூறியதாவது: இப்பள்ளியில் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பெறும் கணினி பயிற்சிக்கானச் சான்றிதழை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மாநில அளவில் பல்வேறு விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளதற்கு அடிப்படை காரணம், ஆசிரியா்கள் - பெற்றோா்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியாகும். தமிழக பள்ளிக் கல்வித் துறை கொண்டுவந்துள்ள ‘எண்ணும்-எழுத்தும்’ கற்பித்தல் திட்டம், ‘நம்பள்ளி-நம்பெருமை’, பள்ளி மேலாண்மைக் குழு உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் இப் பள்ளியில் திறம்பட செயல்படுத்தப்படுகிறது என்றனா்.