பணமுறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரா் நீதிமன்றத்தில் ஆ...
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, தில்லை நகர், 10-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மறைந்த சகோதரரான ராமஜெயம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து திருச்சி வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு, தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இ.டி சோதனை நடைப்பெற்று வரும் தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அவர் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென்று சோதனை மேற்கொண்டு வருவது, திருச்சி மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.