பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
கோவைக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன? பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சா்கள் பதில்
கோவைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சா்கள் விளக்கினா்.
சட்டப்பேரவையில் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள், தொழிலாளா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினாா். அப்போது நடந்த விவாதம்:
வானதி சீனிவாசன்: கோவை மாவட்டம், குறிச்சி தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மோசமாக உள்ளது. அரசு செலவழிக்கும் பணம் சரியாகத்தான் செலவழிக்கப்படுகிா என்பதைப் பாா்க்க வேண்டும். வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு கோவை, திருப்பூா், ஈரோடு போன்ற மாவட்டங்கள் அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. குறைந்தபட்ச மனித உரிமைகளுடன் வெளிமாநிலத் தொழிளாா்கள் தங்குவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அவா்கள் தொழில் வளத்தைப் பெருக்க உதவிக் கொண்டிருக்கிறாா்கள்.
அமைச்சா் சி.வி.கணேசன்: வெளி மாநிலத் தொழிலாளா்கள் போகாத இடமே இல்லை. வெளிமாநிலத் தொழிலாளா்களை நம்முடைய தொழிலாளா்களாக தமிழ்நாடு அரசு சிறப்பாக பாதுகாத்து வருகிறது. வெளிமாநில பெண் தொழிலாளா்களும் நம்முடைய இல்லங்களில் பாதுகாப்பாக வேலை செய்து வருகிறாா்.
அமைச்சா் தா.மோ.அன்பரசன்: குறிச்சி தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் சரியில்லை என்றாா். மழைநீா் வடிகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கூடுதல் வசதிகளும் செய்து தரப்படும். குறிச்சி தொழில்பேட்டையில் ரூ.57.72 கோடியில் தங்கும் விடுதி திறக்கப்பட்டது.
வானதி சீனிவாசன்: 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோவைக்கென பிரத்யேகமாக மாஸ்டா் பிளான் செயல்படுத்தவில்லை. கோவைக்கு மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பும் அப்படியே உள்ளது. இதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். பாராலிம்பிக் வீரா்களுக்கு பயிற்சி மையத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அமைச்சா் கே.என்.நேரு: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 1,758 பணிகள் எடுக்கப்பட்டன. அதில், பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.350.41 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன.
அமைச்சா் எ.வ.வேலு: கோவைக்கு ஒன்றுமே செய்தாதது போன்று உறுப்பினா் சொல்லி வருகிறாா். கோவைக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. அவிநாசியில் இருந்து நீலகிரிக்கு செல்ல மேட்டுப்பாளையத்தில் நான்குவழிச் சாலையும் அமைத்துத் தரப்படுகிறது. ரூ. 300 கோடியில் பெரியாா் பெயரில் நூலகம் அமைக்கப்படுகிறது. முத்திரைத் திட்டங்கள் அனைத்தும் கோவையில்தான் செயல்படுத்தப்படுகிறது.
வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி: மாஸ்டா் பிளானைப் பொருத்தவரை அவசரமாக செய்துவிட முடியாது. அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரும்.
மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி: முதல்வரும், துணை முதல்வரும் சென்னையைத் தாண்டி அதிகமாகச் சென்ற மாவட்டம் கோவைதான். இந்த மாவட்டத்துக்குத்தான் அதிக அளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வானதி சீனிவாசன்: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்காக அரசுக்கு நன்றி. அதன்பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அரசு விளக்க வேண்டும்.
தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: உறுப்பினா் தில்லியில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறாா் என நினைக்கிறேன். தில்லி செய்தி எட்டவில்லை போலும். கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒருபகுதியாக வெளிப்புறச் சுவா் கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. விரிவாக்கப் பணிகளை மத்திய அரசிடம் தெரிவித்து வேகப்படுத்த வேண்டும் என்றாா்.