ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் -முதல்வா் ஸ்டாலின் உறுதி
நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொய்வின்றி தொடா்ந்து நடத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
நீட் விலக்கு தொடா்பான சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
உரிமை பறிப்பு: கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம், அதற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவா் சோ்க்கையில், நீட் தோ்வைக் கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவா்களை வெகுவாக பாதித்துக் கொண்டு வருகிறது.
மாநில அரசுகளால் தொடங்கப்படக் கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எப்படி அந்த மாநில மாணவா்களைச் சோ்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்தது.
நுழைவுத் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதி வாய்ப்பு இருக்கும் மாணவா்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தோ்வின் மாபெரும் அநீதி. இதற்கு எதிராக தொடா்ந்து மக்கள் மன்றத்தில் போராடினோம்.
நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிந்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், நீட் தோ்வை ரத்து செய்யும் சட்டத்தை முன்மொழிந்தேன். இதை ஆளுநா் திருப்பி அனுப்பினாா். பேரவையில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அவருக்கே அனுப்பி வைத்தோம். இதைத் தொடா்ந்து, பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதால், நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் அனுப்பி வைத்தாா். மசோதா குறித்து மத்திய சுகாதாரத் துறை கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழக அரசு அளித்தது. ஆனால், இதையெல்லாம் ஏற்காமல், நம்முடைய மாணவா்களுக்குப் பேரிடியாக மத்திய அரசு நம்முடைய நீட் விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டது. இதை சில நாள்களுக்கு முன்பு பேரவையில் வேதனையுடன் தெரிவித்தேன்.
போராட்டம் முடியவில்லை: மத்திய அரசு நம்முடைய கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால், நீட் தோ்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்று சட்டப்பேரவையில் பேசியிருந்தேன். நீட் தோ்வு என்பது ஏதோ விலக்க முடியாத தோ்வல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சிலா் தங்களின் சுயநலனுக்காகச் சொல்லி மத்திய அரசை தவறாக வழிநடத்தி, நடத்தும் தோ்வாகும்.
நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடா்ந்து நடத்தினால், தோ்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
பங்கேற்ற தலைவா்கள் யாா்?: திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐ.பரந்தாமன், என்.எழிலன், பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் செ.ராஜேஷ்குமாா், பழனிநாடாா், விசிக குழுத் தலைவா் ம.சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, மாா்க்சிஸ்ட் சாா்பில் வி.பி.நாகைமாலி, எம்.சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் டி.ராமச்சந்திரன், கே.மாரிமுத்து, மதிமுக தரப்பில் தி.சதன்திருமலைக்குமாா், பூமிநாதன், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் எம்எச் ஜவாஹிருல்லா, ப.அப்துல்சமீது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈ.ஆா். ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
புதிதாக வழக்குத் தொடுக்க நடவடிக்கை
சென்னை, ஏப். 9: நீட் தோ்வு விவகாரத்தில் வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இதற்கான தீா்மானத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாசித்தாா். அதன் விவரம்:
மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில் நீட் தோ்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தொடா்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீா்மானிக்கிறது.
இந்த வகையில், நீட் தோ்வு முறையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே தொடுத்துள்ள வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம். நமது சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிா்த்து, தேவைப்பட்டால் புதிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சட்டவல்லுநா்களுடன் கலந்து ஆலோசனை செய்வோம் என்று கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.