`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்
மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வயது சிறுமி அங்குள்ள பைப் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்பத்தில் சிறுமி மேலிருந்து தவறி விழுந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். ஆனால் சிறுமியின் கழுத்தில் மிகப்பெரிய காயம் இருந்தது. அதோடு சிறுமி போராடி இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையிலும் காயம் இருந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் கொலை செய்யப்படும் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அனில் ஷிண்டே கூறுகையில், ''சிறுமி வீட்டிற்கு வெளியில் வேறு இரண்டு சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விகாஷ்(20) என்பவர் சிறுமிக்கு பொம்மை கொடுப்பதாக கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சத்தம் வராமல் இருக்க சிறுமியின் வாயை பொத்தியதில் சிறுமி மூச்சுத்திணறி இறந்துள்ளார். அப்படி இருந்தும் சிறுமி இறந்ததை உறுதிபடுத்த சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தில் குத்தி இருக்கிறார். பின்னர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து சிறுமியின் உடலை வெளியில் 6வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.
சிறுமியுடன் விளையாடிய இரு சிறுமிகள் முன்பு விஷாலை கொண்டு வந்தபோது அவர் தான் 10 வயது சிறுமியை அழைத்து சென்றார் என்று அடையாளம் காட்டினர். கைது செய்யப்பட்ட வாலிபர் வீட்டில் இருந்து ரத்தக்கரை படிந்த துணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வாலிபர் பீகார் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர். தற்போது வேலை இல்லாமல் இருந்தார்'' என்றார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.