கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் கூடுதல் அமர்வு மகிலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தான்தோன்றிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த நிஷாந்த் (வயது: 24), குறிஞ்சி நகர் அரவிந்த் (வயது: 24), திருக்காம்புலியூர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது: 24) பெருமாள்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (வயது: 29), மருதம்பட்டி காலனி கோகுல்நாத் (வயது: 24), வையாபுரி நகர் பார்த்திபன் (வயது: 31) ஆகிய ஆறு பேர் கூட்டாக சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், மாவட்ட கூடுதல் அமர்வு மகிலாநீதிமன்ற நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிஷாந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், வசந்த் என்கிற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதே போல, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், 19-ம் தேதி 16 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையும் முடிவுக்கு வந்து, நீதிபதி தங்கவேல் இந்த வழக்கிலும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஏழு லட்சம் நிவாரண தொகை வழங்கவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் சமத் (வயது: 59) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையம் வழங்கி கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார்.

மேற்கண்ட இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
ஒரே நாளில் இரண்டு வழக்குகளிலும் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
