மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு
மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது.
மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை மேட்டூா் நகராட்சியில் குடிநீா் விநியோகம், தூய்மைப் பணிகள், முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ரா.பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.
எம்.காளிப்பட்டி ஊராட்சியில், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேட்டூா் நகராட்சியில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். முகாம் நடைபெற்ற இரண்டு நாள்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் சுகுமாா், மேட்டூா் நகராட்சி ஆணையா் நித்தியா, மேட்டூா் வட்டாட்சியா் சுரேஷ், அலுவலா்கள் உடனிருந்தனா்.