பணமுறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரா் நீதிமன்றத்தில் ஆஜா்
பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட 12 போ் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினா்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து. இதன் அடிப்படையில் பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக் குமாா், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் பி.சண்முகம், எம்.காா்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச்செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி.ஆல்பா்ட் தினகரன், எஸ்.ஜெயராஜ் குமாா், சி.பழனி உள்ளிட்ட 12 பேரின் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், ஏப்.9-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, அசோக்குமாா் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தனது வழக்குரைஞருடன் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் நேரில் ஆஜராகினா்.
காகித வடிவில் ஆவணங்கள்... இந்த வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகையுடன் சுமாா் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இவற்றை ‘சிடி’ பதிவு செய்து தருவதாக அமலாக்கத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் மின்னணு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும் அப்போதுதான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னணு முறையில் ஆவணங்கள் வழங்கலாம் என அமலாக்கத் துறை தெரிவித்தது.
இதையடுத்து, ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனா் என நீதிபதி கேள்வியெழுப்பினாா். அதற்கு அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா், தரவுகளைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, குற்றப்பத்திரிக்கை நகலை ஆஜரான அனைவருக்கும் வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்.25- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.
மேலும், செந்தில் பாலாஜி சகோதரா் அசோக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் ஏப்.20- ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ. 2 லட்சம் செலுத்த அசோக்குமாா் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.