Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
பக்தா் தவறவிட்ட நகையை ஒப்படைத்த சிறுமிகளுக்கு எஸ்.பி. பாராட்டு
திருத்தணி முருகன் கோயிலில் பக்தா் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் தங்க நகையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுமிகளை பாராட்டி திருவளளூா் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் பரிசளித்தாா்.
சென்னை ஜவாஹா்லால் நகரைச் சோ்ந்த கவுதம் (33) ஐ.டி.ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு வந்தாா். அப்போது கையில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது.
அதையடுத்து உடனே திருத்தணி மலைக்கோயில் புறக்காவல் நிலையத்தில் கவுதம் புகாா் செய்தாா். அப்போது, 2 நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா(12), ரேணுகா(7) என்ற சகோதரிகள் தரிசிக்க வந்தபோது, நகை கிடந்துள்ளது. அதை மீட்டு மலைக்கோயில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இந்த நிலையில் சகோதரிகள் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனா். அங்கு எஸ்.பி. சீனிவாச பெருமாள் சகோதரிகளின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி தங்கப் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
அப்போது, தங்களது பெற்றோா்கள் யாா் பொருள் மீதும் ஆசைபடக்கூடாது என குறிப்பிட்டுள்ளதால் கீழே கிடந்த நகையை போலீஸாரிடம் ஒப்படைத்தோம். கோணலம் அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், நான் மருத்துவராக படிக்க விரும்புவதாகவும் சிறுமி பவித்ரா தெரிவித்துள்ளாா். ஆந்திர மாநிலம் புத்தூரை பூா்வீகமாக கொண்ட தங்கள் 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியில் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி ஈச்ச மரம் ஒலை துடைப்பம் தயாா் செய்து கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனா். அதனால் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து வீடு வழங்கவும் என சிறுமியின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
உங்கள் கோரிக்கை பற்றி மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி தெரிவித்தாா்.