1-5 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை
`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்பான மோதலில் நடுக்காவேரி போலீஸார் தினேஷை கைது செய்து அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தினேஷனின் சகோதரிகளான மேனகா, கிருத்திகா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அப்போது, `மேனகா எனக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுது, இந்த நேரத்தில் என் தம்பியை கைது செய்யலாமா... அவன் எந்த தப்பும் பண்ணல, அவனை விடுங்க இன்ஸ்பெக்டர் மேடம்,' என்றுள்ளார்.

அதற்கு, இன்ஸ்பெக்டர் சர்மிளா அதெல்லாம் விட முடியாதுனு என்றதுடன், இருவரையும் தகாத வார்த்தைகளில் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த சகோதரிகள் இருவரும் தற்கோலை செய்து கொள்வதற்காக போலீஸ் ஸ்டேஷன் முன்பே விஷம் குடித்து விட்டனர். இந்த நிலையில் அவர்களது உறவினர்கள் இருவரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து இன்று சிகிச்சை பலனிக்காமல் கிருத்திகா இறந்துவிட்டார். மேனகாவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுதனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பொய் வழக்கு போட்டதே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசினோம், "அய்யாவு பட்டியலினத்தை சேர்ந்தவர். நடுக்காவேரியை சேர்ந்த சேர்ந்த ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக மதுப்பாட்டில் விற்பனை செய்து வருகிறார். மது பழக்கத்துக்கு ஆளான அய்யாவுவை அந்த நபர் மது விற்பனை செய்ய வைத்துள்ளார். தினேஷ்க்கு இது பிடிக்காததால் மது விற்பனை செய்பவரிடம் சென்று என் அக்காவுக்கு திருமணம் நடக்க போகுது, வரும் 12ம் தேதி நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை வீட்டுக்கு இது தெரிந்தால் என்னாவது.. இனி எங்க அப்பாவை மது விற்பனை செய்ய அழைக்காதீர்கள் என்றுள்ளார்.

அப்போது, தினேஷ்க்கும், அந்த நபருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தினேஷ் தன்னை தாக்கியதாக அந்த நபர் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அய்யாவு வீட்டுக்கு வந்த போலீஸ் தினேஷை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் இருதரப்பும் போலீஸ் ஸ்டேஷனில் சமாதானம் பேசிக்கொண்டதாக தெரிகிறது.
அப்போது பொறுப்பு இன்ஸ்பெக்டர் சர்மிளா, நீங்களே புகார் கொடுப்பீங்க, அப்புறம் வாபஸ் வாங்கி கொள்வீர்களா என்று கேட்டுள்ளார். அத்துடன் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. இதையறிந்த தினேஷின் சகோதரிகள் மற்றும் தெருவை சேர்ந்தவர்கள் மது விற்பவரை விட்டு விட்டு அதை தட்டி கேட்ட தினேஷ் மீது பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறீர்கள் இது நியாயமா என சர்மிளாவிடம் கேட்டுள்ளனர். அத்துடன், சகோதரிகள் எங்க தம்பியை விட்டு விடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளனர்.

எனக்கு நிச்சயம்தார்த்தம் நடக்கப்போகுது, இந்த நேரத்துல என் தம்பியை கைது செய்துள்ளீர்கள் அவனை விடுங்க என்று சொல்லி மேனகா கேட்டுள்ளார். ஆனால் இதை கேட்காத சர்மிளா அவனை விட முடியாது முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என விரட்டியடித்துள்ளார். இந்த நிலையில் கடைக்கு சென்று விஷ மருந்து வாங்கி போலீஸ் ஸ்டேஷன் முன்பே சகோதரிகள் இருவரும் குடித்த நிலையில் கொஞ்ச நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து விட்டனர். இதையும் இன்ஸ்பெக்டர் அலட்சியம் செய்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் கிருத்திகா உயிரிழந்து விட்டார். பட்டதாரியான அவர் அரசு வேலையில் சேர்வதற்கு தேர்வு எழுதி வந்தார். அவரது நிலை இப்படியாகி விட்டது. அவரது கனவும் கருகி விட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் சர்மிளா தான் காரணம். அவர் இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் உரிய விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். போலீஸ் தரப்பிலோ, தினேஷ் மீது பல வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றோம் என்றனர்.