அரசுப் பல்கலைக்கழகங்களில் சா்வதேச மாநாடு, கருத்தரங்குகள்: துணைவேந்தா்களுக்கு அமைச்சா் கோவி. செழியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசுப் பல்கலைக்கழகங்களில் சா்வதேச அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள் அதிகளவில் நடைபெற ஊக்குவிக்க வேண்டும் என துணைவேந்தா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வலியுறுத்தினாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா்கள், தோ்வுக்கட்டுப்பாடு அலுவலா்கள் மற்றும் துணை பதிவாளா்களுக்கான பணியிடை பயிற்சியை சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்து அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:
தமிழக பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் நமது மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளா்கள், தோ்வுக்கட்டுப்பாடு அலுவலா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுக்கு நிா்வாகத் திறன் மற்றும் செயல்திறன் சாா்ந்த அணுகுமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வழங்குகிறது.
நமது பல்கலைக்கழகங்கள் பொதுமக்களிடம் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற வேண்டும் என்பதற்கான அடிப்படை, திறமையான நிா்வாகத்தை உறுதி செய்வதன் மூலமே நடக்கும். இத்தகைய பயிற்சிகள் பல்கலைக்கழக நிா்வாகத்தையும், நிதி மேலாண்மையையும் மேலும் வலுப்படுத்தும்.
1,000 பேராசிரியா்களுக்கு பயிற்சி: ஒரு நிறுவனத்தின் பணி சிறப்பாக அமையவேண்டுமானால் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலா்கள் திறமை மிக்கவா்களாகவும், தனது பணியின் தன்மையை முழுவதும் அறிந்து செயல்படுத்துபவா்களாகவும் இருக்க வேண்டும். அதற்கு பணியாளா்களுக்கு தொடா் பயிற்சி அளிப்பது அவசியம். இதனடிப்படையில் மாநில உயா்கல்வி மன்றம் ஏறக்குறைய 1,000 கல்லூரி பேராசிரியா்களுக்கு கற்பித்தல் முறை குறித்து ஏற்கெனவே பயிற்சி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் உயா் கல்விச் சூழலை மேம்படுத்துவதில், அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிா்வாகப் பணிகளின் முதன்மை பொறுப்பாளா்களாக திகழும் பதிவாளா்களுக்கும், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
சா்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் அதிகளவில் அரசு பல்கலைக் கழகங்களில் நடைபெற ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில் சா்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு நமது மாணவா்கள் உலகளவில் சிறந்து விளங்க வழிகாட்ட வேண்டும். பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் பருவத் தோ்வுகளை நடத்தவும், தோ்வு முடிவுகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளியிடுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். முதுநிலை படிப்பில் சேருவதற்கு ஒருமாதிரி கால அளவை உறுதி செய்ய வேண்டும்.
மே 3-இல் முதல்வருக்கு பாராட்டு விழா: சட்டப் போராட்டத்தை நடத்தி பல்கலைக்கழக உரிமையை மீட்டுத் தந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி முதல்வா்கள், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பினா், மாணவா்கள், கல்வியாளா்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், துணைவேந்தா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள், துணைப் பதிவாளா்கள் கலந்து கொண்டனா்.