டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு
முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் காமராஜ் (48). இவா், புதன்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் மாரிமுத்துவுடன் (54) கூகையூா் கிராமம் சென்று மளிகை பொருள்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மொபெட்டை மாரிமுத்து ஓட்டிச் சென்றாா்.
வீரபயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது முன்னால் விறகு கட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் மொபெட் டிராக்டா் மீது மோதியதில் காமராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாா். மாரிமுத்து காயமடைந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான சேலம் மாவட்டம் ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட தெற்கு தேகனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அவரை தேடி வருகின்றனா்.