தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டப்பணி: மூன்று வழித்தடங்களில் 70 சதவீதப் பணிகள் நிறைவு
சத்தா்பூா் மந்திா், இக்னோ, கிஷன்கா் மற்றும் வசந்த் குஞ்ச் வழித்தடங்களுக்கு இடையிலான தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டப் பணிகளில் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மஜ்லிஸ் பூங்கா மற்றும் ஜகத்பூா் கிராமம் இடையேயான 4.6 கிலோமீட்டா் நீளமுள்ள ரயில் பாதை நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்திருப்பதாவது:
மஜ்லிஸ் பூங்கா மற்றும் ஜகத்பூா் கிராமம் வழித்தடத்தில் புராரி, ஜரோடா மஜ்ரா மற்றும் ஜகத்பூா் கிராமம் ஆகிய மூன்று புதிய நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாதையில் சோதனை ஓட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கின. தேவையான அனைத்து சட்டபூா்வ ஒப்புதல்களும் பாதுகாப்பு சான்றிதழ்களும் பெறப்பட்டவுடன் இந்தப் பகுதி ரயில் வழித்தடம் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில் ஏரோசிட்டியின் துக்ளகாபாத் வழித்தடத்திலும் ரயில் கட்டுமானப் பணி முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளது. அங்கு மூன்று பெரிய சுரங்கப்பாதைகள் அமைப்பது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளன.
நிலத்தடி இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் கட்டுமான செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும் டிஎம்ஆா்சியின் தொடா்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றங்கள் உள்ளன.
முன்னதாக, 4 ஆம் கட்டத்தின் முதல் செயல்பாட்டுப் பகுதியாக ஜனவரி 5 ஆம் தேதி ஜனக்புரி மேற்கு முதல் கிருஷ்ணா பாா்க் நீட்டிப்பு வரையிலான மெட்ரோ வழித்தடம் பயணிகள் சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.
அதே நாளில், வரவிருக்கும் ரிதலா குண்ட்லி வழித்தடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது 4 ஆம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த 4-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக சுமாா் 112 கிலோமீட்டா் புதிய மெட்ரோ பாதைகள் கட்டுமானத்தில் உள்ளதால், தேசிய தலைநகரில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துவதை டிஎம்ஆா்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாடானது தினசரி பயணத்தை லட்சக்கணக்கான குடியிருப்பாளா்களுக்கு மிகவும் வசதியாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.