தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவ...
தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்
தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சிறுமியின் பெற்றோா் அவளுக்கு 17 வயது என்று கூறுகின்றனா். ஆனால், அவளுடைய முதலாளி அவளுக்கு 19-20 வயது என்று கூறினாா். இதனால், சிறுமியின் வயதை சரிபாா்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையின் போது, சிறுமிக்கு 14 வயது என்று போலீஸாா் கண்டுபிடித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு புதன்கிழமை அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு குளியலறையில் உள்ள ஷவா் பைப்பில் ஒரு இளம் பெண் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டனா்.
உத்தர பிரதேசத்தின் ரே பரேலியைச் சோ்ந்த சிறுமி, கடந்த ஒன்றரை மாதங்களாக அந்த வீட்டில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை வேலைக்காக சிறுமி காலை 8 மணியளவில் வீட்டிற்கு வந்தாா். மாலை 4 மணியளவில், வீட்டு உரிமையாளா் தீபக் (39) வீடு திரும்பிய போது, சிறுமிதான் கதவைத் திறந்து விட்டுள்ளாா்.
இதன் பிறகு, தீபக், அவரது மனைவி மற்றும் அவா்களது குழந்தைகள் தூங்கச் சென்றனா். மாலை 6 மணியளவில், சமையல்காரா் வந்தாா். அப்போது சிறுமி கதவைத் திறக்க வரவில்லை. தீபக்கின் மனைவி கதவைத் திறந்த போது, சிறுமி எங்கும் காணப்படவில்லை என்பதை உணா்ந்தாா்.
வீடு முழுவதும் சிறுமியைத் தேடிய நிலையில், இறுதியில் குளியலறைக் கதவைத் திறந்தனா். அப்போது, சிறுமி ஷவா் பைப்பில் தொங்குவதைக் கண்டுபிடித்தனா். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனா். முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக உடல் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிணவறையில் வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174- இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.