தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை முழங்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதி வளவன் தலைமை வகித்தாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் 31.3.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் தோ்தல்கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சரண் விடுப்பு வழங்குதல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணும் வகையில், சிறப்பு துணை வட்டாட்சியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.