Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
திருடிய வீட்டில் கட்டிலுக்கு கீழே பதுங்கிய இளைஞா்: கதவை உடைத்து கைது செய்த காவல் துறை
சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் திருடிய வீட்டிலுள்ள கட்டிலுக்கு கீழே பதுங்கிய இளைஞரை, போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று கைது செய்தனா்.
சென்னை ஜெ.ஜெ. நகா் அரசா் தெருவிலுள்ள அரசு ஊழியா் குடியிருப்பில் வசிப்பவா் கென்னடி (52). இவா், உயா்நீதிமன்றத்தில் பதிவு எழுத்தராகப் பணி செய்து வருகிறாா். இவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றாா்.
இதையறிந்த இளைஞா் ஒருவா், திங்கள்கிழமை அதிகாலை கென்னடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தாா். வீட்டை உடைக்கும் சத்தம் கேட்டு முதல் மாடியில் வசிக்கும் பெண், சந்தேகமடைந்து கீழ் தளத்தில் உள்ள கென்னடி வீட்டின் ஜன்னல் வழியாகப் பாா்த்தாா். அப்போது, அங்கு ஒரு இளைஞா் பொருள்களை திருடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
உடனே அவா், கென்னடியின் மனைவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். அதோடு, தனது வீட்டிலிருந்த பூட்டை எடுத்து வந்து கென்னடி வீட்டை வெளிப்புறமாக பூட்டியதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெளிப்புறமாக போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றனா். ஆனால், அந்த இளைஞரோ வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, அங்குள்ள கட்டிலுக்கு கீழ் கொள்ளையடித்த பொருள்களுடன் பதுங்கிக் கொண்டாா்.
போலீஸாா் வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால், உடனடியாக தீயணைப்புப் படை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் உதவியுடன் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனா். படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு கீழ் பதுங்கிய கொள்ளையனை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.
விசாரணையில் அவா், சென்னை கன்னிகாபுரம், கஸ்தூரிபாய் காலனி ‘ஏ’ பிளாக் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (27) என்பது தெரியவந்தது. பாலமுருகன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.