வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீ...
MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ஹர்திக் பாண்ட்யா!
'மும்பை தோல்வி!'
வான்கடே மைதானத்தில் நடந்திருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்வி பற்றியும் திலக் வர்மாவை கடந்த போட்டியில் ரிட்டையர் அவுட் செய்ததைப் பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசியிருக்கிறார்.

'ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!'
ஹர்திக் பாண்ட்யா பேசியதாவது, 'பிட்ச் பேட்டிங் ஆட நன்றாகவே இருந்தது. அதனால்தான் ரன் மழை பொழிந்திருக்கிறது. இன்னும் இரண்டே இரண்டு பெரிய ஷாட்கள் இருந்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம். இந்த பிட்ச்சில் பௌலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் பௌலர்களை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.
நமன் தீர் எங்களின் முக்கியமான வீரர். ரோஹித் இல்லையெனும் போது நமன்தான் மேலே ஆட வேண்டும் என நினைத்தோம். ஏனெனில், அவர் பல பரிணாமங்களை கொண்ட வீரர். ரோஹித் இன்று குணமாகிவிட்டார். அதனால்தான் நமனை மீண்டும் கிழிறக்கினோம்.' என்றார்.
'ரிட்டையர் அவுட் பற்றி ஹர்திக் பாண்ட்யா!'
மேலும் அவர் திலக் வர்மா பற்றி பேசுகையில், 'திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் செய்ததைப் பற்றி வெளியில் நிறைய பேசிவிட்டார்கள். ஆனால், அந்தப் போட்டிக்கு முந்தைய நாளின் பயிற்சியின் போது திலக் வர்மா கை விரலில் பலத்த அடி வாங்கியிருந்தார். அவரின் விரல்களின் நிலைமையை கருத்தில் கொண்டுதான் அந்த ரிட்டையர் அவுட் முடிவு எடுக்கப்பட்டது.

இன்று திலக் வர்மா அற்புதமாக ஆடிவிட்டார். இதேமாதிரியான போட்டிகளில் பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடிப்பது முக்கியம். ஆனால், நாங்கள் அதில் கொஞ்சம் பின் தங்கிவிட்டோம். பும்ரா அணிக்கு மீண்டும் வந்திருப்பது எங்கள் அணியையே ஸ்பெஷலாக மாற்றியிருக்கிறது.' என்றார்.