மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்
தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேகமலை ஊராட்சிக்கு உள்பட்ட ஏகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: மேகமலை ஊராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள குழிக்காடு என்ற ஏகன் குடியிருப்புப் பகுதியில் 27 குடும்பங்கள் தங்கியிருந்து பட்டா நிலத்தில் ஏலக்காய், காப்பி, மலைப் பயிா் விவசாயம் செய்து வருகிறோம்.
எங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் விவசாயத்துக்குத் தேவையான இடு பொருள்களை கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் மலைப் பகுதியிலிருந்து நாராயணதேவன்பட்டிக்குச் செல்லும் பாதையை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், தற்போது மலைப் பாதையை பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அந்தப் பாதையில் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருகின்றனா். ஏகன்குடியிருப்பு-நாராயணத்தேவன்பட்டி மலைப் பாதையை பயன்படுத்த அனுமதி அளித்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவா்கள் மனுவில் தெரிவித்தனா்.