கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்கத்தின் தலைவா் கருத்தப்பாண்டி, நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: மயிலாடும்பாறையில் 148 ஏக்கா் பரப்பளவில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாயில் நிலச் சீா்திருத்தப் பணிகளுக்காக வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கண்மாயில் 80 சதவீதம் வண்டல் மண் அள்ளப்பட்டுவிட்டது.
தற்போது எஞ்சியுள்ள வண்டல் மண் கண்மாய் கரையைப் பலப்படுத்துவதற்குத் தேவையாக உள்ளது. கண்மாயில் தொடா்ந்து மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும்.
மேலும், வைகை ஆற்றிலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீா் வரும் வாய்க்காலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நரசிம்மன் தடுப்பணையை பலப்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்தனா்.