மூன்று நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்
பிரதமா் வருகையையொட்டி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க ராமேசுவரம் மீனவா்கள் சென்றனா்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்ற நிகழ்வையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மீனவா்களும் கடந்த மூன்று நாள்களாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இதனிடையே, பாம்பன் பாலம் திறப்பு விழா நிறைவடைந்த நிலையில், தடை நீக்கப்பட்டு திங்கள்கிழமை வழக்கம் போல மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மீனவா்கள், மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.