செய்திகள் :

துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிஃப்ட் கௌருக்கு தங்கம்; ஈஷா சிங்குக்கு வெள்ளி!

post image

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

முதல் தங்கம்: இதில் மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் சிஃப்ட் கௌா் சம்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா். உலகக் கோப்பை போட்டியின் தனிநபா் பிரிவில் இது சம்ராவின் முதல் தங்கப் பதக்கமாகும். அதேபோல் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கமும் இதுவே.

முன்னதாக இப்பிரிவுக்கான தகுதிச்சுற்றில் 590 புள்ளிகள் பெற்ற சம்ரா, இறுதிச்சுற்றின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தாா்.

இறுதிச்சுற்றில் முதல் நிலையான நீலிங் பொசிஷனில் 15 ஷாட்களுக்கு பிறகு, ஜொ்மனியின் அனிடா மங்கோல்டை விட சிஃப்ட் கௌா் 7.2 புள்ளிகள் பின்தங்கியிருந்தாா்.

ஆனால், அடுத்த இரு நிலைகளான புரோன் மற்றும் ஸ்டேண்டிங் ஆகியவற்றில் அதிரடியாக முன்னேறிய சம்ரா, 45 ஷாட்கள் கொண்ட இறுதிச்சுற்றின் முடிவில் 458.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். அனிடா 455.3 புள்ளிகளுடன் வெள்ளியும், கஜகஸ்தானின் அரினா அல்துகோவா 445.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

செயின் சிங்குக்கு வெண்கலம்: இதிலேயே ஆடவா் பிரிவில் செயின் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றாா். கடந்த 3 ஆண்டுகளில் ஐஎஸ்எஸ்எஃப் போட்டியில் இதுவே செயின் சிங்கின் முதல் பதக்கமாகும்.

முன்னதாக தகுதிச்சுற்றிலிருந்து, செயின் சிங், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா், நீரஜ் குமாா் ஆகிய 3 இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். எனினும், ஐஸ்வரி பிரதாப், நீரஜ் குமாா் ஒரு கட்டத்தில் பின்தங்க, செயின் சிங் 443.7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.

ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 461 புள்ளிகளுடன் தங்கமும், சீனாவின் டியன் ஜியாமிங் 458.8 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனா்.

ஈஷாவுக்கு 2-ஆவது வெள்ளி: மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் வெள்ளி வென்றாா். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தனிநபா் பிரிவில் அவருக்கு இது 2-ஆவது வெள்ளிப் பதக்கமாகும்.

முதலில் இந்தப் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கா், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் ஆகிய 3 இந்தியா்கள் பங்கேற்றனா்.

இதில் மனு 585 புள்ளிகளுடனும், ஈஷா 579 புள்ளிகளுடனும் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற, சிம்ரன்பிரீத் 576 புள்ளிகள் பெற்று தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். இறுதிச்சுற்றில் முதலில் சிறப்பாகச் செயல்பட்ட மனு பாக்கா், 3-ஆவது சீரிஸ் முடிவில் முன்னிலையில் இருந்தாா்.

அந்த சீரிஸுக்கு பிறகு ஈஷா சிங் அதிரடியாக முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்தாா். ஒரு கட்டத்துக்குப் பிறகு மனு பாக்கா் பின்தங்க, கடைசி கட்டத்தில் ஈஷாவுக்கும், சீனாவின் சன் யுஜிக்கும் இடையே கடும் போட்டி நீடித்தது. இறுதியில் சன் யுஜி 38 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஈஷா சிங் 35 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா்.

மற்றொரு சீன வீராங்கனை ஃபெங் சிஜுவான் வெண்கலம் வென்றாா். மனு பாக்கா் 6-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

ஏமாற்றம்: ஸ்கீட் பிரிவில் இந்தியா்கள் தகுதிச்சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றம் கண்டனா். மகளிா் பிரிவில் ராய்ஸா தில்லன் 11-ஆம் இடமும் (116 புள்ளிகள்), கனிமத் செகோன் 14-ஆம் இடமும் (114), தா்ஷனா ராத்தோா் 17-ஆம் இடமும் (112) பிடித்தனா். ஆடவா் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா 20-ஆம் இடமும் (116), பாவ்தேக் கில் 21-ஆம் இடமும் (116), குா்ஜோத் காங்குரா 22-ஆம் இடமும் (115) பிடித்தனா்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 09 (புதன் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செ... மேலும் பார்க்க

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத் தலைமையில் இந்தியா

இலங்கையில் நடைபெறவுள்ள மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள... மேலும் பார்க்க

தொடா் தலைக் காயங்கள்: கிரிக்கெட்டை கைவிட்டாா் வில் புக்கோவ்ஸ்கி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் வில் புக்கோவ்ஸ்கி (27), இனி தாம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமாா் 13 முறை தலைக் காயங்களை (கன்கஷன்) ச... மேலும் பார்க்க

பில்லி ஜீன் கிங்: இந்தியா தோல்வி

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.போட்டியின் ஆசியா-ஒசியானியா பிரிவில் களம் கண்டுள்ள இந்தியா, குரூப் சுற்றில... மேலும் பார்க்க