ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?
இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் இருமாத நாணயக் கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணயவியல் கொள்கைக் குழுவின் கூட்டம் ஏப்.7 ஆம் தேதி தொடங்கி இன்று (ஏப்.9) வரை நடைபெறுகிறது.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். இதனால், வர்த்தகப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை ஆணையம், ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பணவீக்கம் 4 சதவிகிதம் வரை குறைந்து இருப்பதாகவும், 25 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்றும் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர்.
தற்போது 6.25-லிருந்து மேலும் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!