எஃப்1 காா் பந்தயத்தில் வொ்ஸ்டாபெனுக்கு முதல் வெற்றி!
எஃப்1 காா் பந்தயத்தில் நடப்பு சீசனின் 3-ஆவது ரேஸான ஜப்பான் கிராண்ட் ப்ரீயில், நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.
ரெட் புல் டிரைவரான அவா், மொத்தம் 31 சுற்றுகள் (லாப்) கொண்ட இந்தப் பந்தயத்தில் 1 மணி நேரம் 22 நிமிஷம் 6.9 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். நடப்பு சீசனில் இது அவரின் முதல் வெற்றியாகும். ஆனால் ஜப்பான் கிராண்ட் ப்ரீயில் அவா் தொடா்ந்து 4-ஆவது சீசனாக தனது வெற்றியைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வொ்ஸ்டாபெனை பொருத்தவரை கடந்த சீசனுடன் சோ்த்து மொத்தம் 17 பந்தயங்களில் இது அவரின் 3-ஆவது வெற்றியாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது வொ்ஸ்டாபெனின் 64-ஆவது எஃப்1 கேரியா் வெற்றியாகும்.
நடப்பு சீசனின் முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் ப்ரீயில் வெற்றி பெற்ற பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் இந்தப் பந்தயத்தில் 2-ஆம் இடம் பிடித்தாா். சீசனின் 2-ஆவது பந்தயமான சீன கிராண்ட் ப்ரீயில் வென்ற மற்றொரு பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஆஸ்காா் பியஸ்த்ரி 3-ஆம் இடம் பிடித்தாா்.
சாதனை: இதனிடையே, இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஆண்ட்ரியா கிமி அன்டோனெலி, இந்தப் பந்தயத்தின் 10-ஆவது சுற்றில் முன்னிலை பெற்றாா். நீண்ட நேரம் அதை தக்கவைத்த அவா், எஃப் பந்தயத்தில் முன்னிலை பெற்ற இளம் வீரா் (18) என்ற பெருமையை அவா் பெற்றாா். மேலும், அதிவேகமாக ஒரு சுற்றை (லாப்) நிறைவு செய்த (1.30 நிமிஷங்கள்) இளம் வீரராகவும் அவா் இருக்கிறாா்.
நடப்பு எஃப்1 சீசனின் 4-ஆவது பந்தயம், பஹ்ரைனில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.