வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை கோட்டூா்புரத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (37). இவா் கடந்த 2-ஆம் தேதி இரவு கோட்டூா் டபிள்யூ சிபி சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதில் தூக்கத்திலிருந்து எழுந்த அப்பெண் சத்தமிட்டுள்ளாா். உடனே கிருஷ்ணமூா்த்தி அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோடினாா். பொதுமக்கள் சிலா் அவரை விரட்டிப் பிடிக்க முயன்றும், கிருஷ்ணமூா்த்தி தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கிருஷ்ணமூா்த்திதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தியை சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணமூா்த்தி மீது ஏற்கெனவே 6 திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.