எச்சரிக்கை மணியான முதல் தோல்வி..! பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டி!
முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் முதல் தோல்வி விரைவிலேயே வந்தது எச்சரிக்கை மணியாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.
கடந்தாண்டு சாம்பியன் வென்ற கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற பஞ்சாப் அணி நேற்றிரவு ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோசமாக தோல்வியுற்றது.
இது குறித்து போட்டி முடிந்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது:
எச்சரிக்கை மணி
இலக்கு 180-185 ரன்களாக இருந்திருந்தால் எங்களுக்கு சேஸிக் எளிதாக இருந்திருக்கும். சிறிது ரன்களை அதிகமாக வழங்கிவிட்டோம்.
எங்களது திட்டங்களை நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.
நல்ல வேளையாக இந்தத் தோல்வி தொடரின் ஆரம்ப நிலையிலேயே வந்தது.
இது 3ஆவது போட்டிதான். அதனால், இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்கிறேன்.
பந்துவீச்சில் கவனம் தேவை
மீண்டும் என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்து அதிலிருந்து வலுவாக திரும்பி வருவோம்.
நிறைய விஷயங்களை இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொண்டோம்.
இந்தப் போட்டியில் ஈரப்பதமும் இல்லை. அதனால் நாம் அதைக் குறைகூற முடியாது.
பந்துவீச்சில் என்ன தவறு செய்தோம் என்பதை விடியோ பார்த்து ஆலோசிக்க வேண்டும்.
(மார்கஸ் ஸ்டாய்னிஸ் 48, மார்கோ ஜான்சன் 45 ரன்களை வாரி வழங்கினார்கள்)
பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும்
பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். தொடச்சியான விக்கெட்டுகளை இழந்தோம். புதிய பேட்டர் அதிரடியாக விளையாட முடியாது.
இளம் வீரர் நேஹல் வதேரா அழுத்தத்திலும் சிறப்பாக விளையாடினார். சற்று நேரமெடுத்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார்.
ரன்கள் குவிக்க ஏற்ற பிட்ச்தான் இது. சற்று நின்று வருகிறது. நாங்கள் பிட்ச்சில் அடித்து பந்து வீசினோம். இன்னும் சிறுது வேகத்தை குறைத்திருக்க வேண்டும்.
வேகமாக அடிக்க முயற்சிக்காமல் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.