`விவசாயத்திற்கு வாங்கும் நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றனர்' - மகாராஷ்டிரா அமைச்சர் புகார்
மகாராஷ்டிராவில் ஏற்கெனவே விவசாயிகள் கடன் தொல்லையால் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் சில இடங்களில் பருவம் தவறிய மழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நாசிக் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விவசாயி, துணை முதல்வர் அஜித் பவார் கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று கூறி இருக்கிறார். சரியாக கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு எதாவது சலுகை உண்டா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மாணிக்ராவ், ``கடனை சரியாக திரும்ப செலுத்துபவர்கள் தொடர்ந்து அதனை செய்யவேண்டும். ஆனால் சிலர் கடன் தள்ளுபடியாகும் என்ற நம்பிக்கையில் 5 ஆண்டுகள் காத்திருக்கின்றனர்.

விவசாயத்திற்கு என்று சொல்லி கடன் வாங்குகின்றனர். ஆனால் கடனை திரும்ப செலுத்துவதில்லை. கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, அப்பணத்தில் ஒரு ரூபாய் கூட விவசாய தேவைக்கு பயன்படுத்துவதில்லை. இதே போன்று நீர்ப்பாசனம், பைப்லைன், குளம் வெட்டுவதற்காக கொடுக்கும் பணத்தை விவசாயிகள் அந்த தேவைக்கு பயன்படுத்தாமல் மாறாக திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்'' என்று கூறி இருக்கிறார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஸ்வர்தன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``அமைச்சர் மாணிக்ராவ் எப்போதும் அதிகார போதையில் விவசாயிகளை மரியாதை குறைவாக பேசுகிறார். இதற்கு முன்பு விவசாயிகளை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசி விவசாயிகளை அவமதித்தார். எனவே அவரை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மாணிக்ராவ் அளித்திருந்த பேட்டியில், பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாயை வாங்க மாட்டார்கள். ஆனால் மகாராஷ்டிரா அரசு ஒரு ரூபாயில் பயிர் காப்பீடு வழங்குகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். மகாராஷ்டிராவில் கடந்த 24 வருடத்தில் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.