முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: எம்புரான் படக் காட்சிகள் நீக்கம்; போராடிய விவசாயிகள் மகிழ்ச்சி
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தைத் தொடர்புப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்குக் குஜராத் கலவர வழக்கில் தொடர்புடையவரின் பெயரையும் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தில் நெடும்பள்ளி டேம் என்று பெயரிடப்பட்ட அணை இடம்பெற்றிருக்கும். அந்த அணை மக்களைக் காவு வாங்கக் காத்து நிற்கிறது, அணையைக் குண்டு வைத்துத் தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும், அணையைக் காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால்தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தைத் திரையிடாவிட்டால், படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் நடத்தும் நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி புதன்கிழமை தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் அருகே போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அரசியல் கட்சியினரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனப் பேசினார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுத் திரையிடப்படுவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம், ''முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாகச் சித்தரித்த காட்சிகளை நீக்கும்படி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிலிருந்துதான் முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பியது.

அதனைத்தொடர்ந்து காட்டுத் தீயாய் பரவி மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினர். கடும் எதிர்ப்பு காரணமாகக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் மட்டுமில்லாது அனைத்து மாநிலங்களிலும் முல்லைப்பெரியாறு தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb