2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை 2034-ஆம் ஆண்டு அமலாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சென்னை அருகேயுள்ள கட்டாங்குளத்தூரில் உள்ளதொரு தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 1.5% வளர்ச்சி ஏற்படும். ஜிடிபி ரூ. 4.50 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சியை எட்டும். பொருளாதாரம் வலிமையானால் மட்டுமே, சமூகப் பிரிவினைகளைக் கடந்து மக்கள் வளர்ச்சியடைவர்.
2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான மொத்த செலவின தொகை ரூ. 1 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுகள் அனைத்தும்(மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள்) ஒரே ஆண்டில் நடத்தப்பட்டால் ரூ. 12,000 கோடி சேமிக்கலாம். அந்த தொகையை மக்கள் நலனுக்காக செலவிடலாம் என்றார்.