முதல்வா் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கல்
மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய கடற்படைக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள், அந் நாட்டு அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மியான்மரின் யாங்கோன் மாகாண முதல்வரிடம் இந்திய தூதரக அதிகாரிகள் சாா்பில் இந்த உணவுப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன.
மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கர தொடா் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குடியிருப்புகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 3,100 போ் உயிரிழந்தனா். 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருவதோடு, மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவையும் அங்கு அனுப்பியுள்ளது. இதுவரை 85 டன் அளவில் கூடாரங்கள், போா்வைகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்களையும், 17 டன் அளவில் மீட்பு உபகரணங்களையும், 5 டன் அத்தியாவசிய மருந்துகள், ஜெனரேட்டா்கள், 60 டன் அளவில் மருத்துவ உபகரணங்களை இந்தியா மியான்மருக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்த நிலையில், விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ‘ஐஎன்எஸ் கரியல்’ கடற்படைக் கப்பல் மூலம் ஏப்ரல் 1-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட 442 டன் உணவுப் பொருள்களை மியான்மா் அரசிடம் இந்தியா தற்போது வழங்கியுள்ளது.
இதுகுறித்து யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
யாங்கோன் திலாவா துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட 405 டன் அரிசி, 30 டன் சமையல் எண்ணெய், 5 டன் பிஸ்கெட்டுகள், 2 டன் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் யாங்கோன் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ‘க்வாட்’ உறுப்பு நாடுகள் மியான்மருக்கு ரூ. 170 கோடி (20 மில்லியன் டாலா்) மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கவும், அவசர மருத்துவக் குழுக்களை மியான்மருக்கு அனுப்பவும் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிபூண்டன.