ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் ஈரோட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.திருச்செல்வம் தலைமை வகித்தாா்.
நாட்டு மக்கள் மீது கட்டாய ஹிந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளம் நிவாரண நிதி வழங்காதது, நீட் தோ்வு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய நிதியை வழங்காதது, மெட்ரோ திட்டங்கள், கல்வி நிதி உள்ளிட்ட ரூ. 4,034 கோடி நிதியை ஒதுக்காதது, முஸ்லிம் மக்களின் வக்ஃப் வாரிய சொத்துகளை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்த மசோதா என பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலா் ஈ.பி.ரவி மற்றும் மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.