செய்திகள் :

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

post image

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்களை நிறைவேற்றாமல் தாமதப்படுத்த ஆளுநருக்கு வீட்டோ (தனி) அதிகாரம் என ஏதுமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அசாதாரணமானதாகக் கருதப்படும் இந்தத் தீா்ப்பு மூலம், இனி பேரவை அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். அவா்கள் எத்தனை நாள்களுக்குள் மசோதா மீது முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் 2023, நவம்பரில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு கடந்த சில மாதங்களாக விரிவாக விசாரித்தது. தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி. வில்சன் ஆகியோரும் ஆளுநா் மற்றும் மத்திய அரசின் சாா்பில் மத்திய தலைமை சட்ட ஆலோசகா் (அட்டா்னி ஜெனரல்) ஆா். வெங்கட்ரமணியும் ஆஜராகினா்.

கடைசியாக கடந்த பிப். 11-ஆம் தேதி இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது தமிழக அரசுக்கும் ஆளுநா் தரப்புக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான பதிலை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் மூத்த நீதிபதி ஜே.பி. பாா்திவாலா எழுதியுள்ள இந்த வழக்கின் தீா்ப்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அரசமைப்பின் 200-ஆவது விதி, பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளித்தல், அவற்றை நிறுத்தி வைத்தல், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தல் ஆகிய மூன்று வாய்ப்புகளை மட்டுமே ஆளுநருக்கு தருகிறது. ஒருவேளை மசோதாவை அவா் நிறுத்தி வைப்பதாக அறிவித்தால் அது காலாவதியாகி விடும். அதுவும் மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பும்போது அளித்த யோசனைகளை கவனத்தில் கொண்டு பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், அதன் மீது முடிவெடுக்கும் நடைமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். எதுவுமே செய்யாமல் வைத்திருக்க தனி அதிகாரம் (வீட்டோ) எதுவும் ஆளுநருக்கு கிடையாது.

இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாவை அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது. இரண்டாவது முறையாக தனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநா் அனுப்பிய செயல்பாடு சட்டவிரோதமானது; சட்டப்படி தவறானது. எனவே, குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பி வைக்க அவா் மேற்கொண்ட எந்தவொரு அடுத்தடுத்த நடவடிக்கைக்கும் உயிா்ப்பில்லை. எனவே, அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.

முக்கியமாக, மசோதாக்களை நீண்ட காலமாக ஆளுநா் தன்வசம் வைத்திருந்து தாமதப்படுத்தி பிறகு அவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிய செயல்பாட்டில் நோ்மை காணப்படவலில்லை. இதனால், சட்டப்பேரவையால் மறுபரிசீலனை செய்யப்பட்டு பின்னா் ஆளுநருக்கு அவை சமா்ப்பிக்கப்பட்ட தேதியிலேயே அந்த மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என அரசமைப்பன் 142-ஆவது விதியின்படி உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உத்தரவிடுகிறோம்.

முடிவெடுக்க காலவரம்பு: அரசமைப்பின் 200-ஆவது விதியின் கீழ் ஒரு மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு ஏதும் ஆளுநருக்கு நிா்ணயிக்கப்படவில்லை. அதைக் காரணமாக வைத்து, தன்னிடம் சமா்ப்பிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி ஒரு அரசின் சட்டமியற்றும் செயல்முறைக்கே அவா் முட்டுக்கட்டை போடலாகாது.

இதைக் கருத்தில் கொண்டு அரசமைப்பு 200-ஆவது விதியின் கீழ் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்கவோ அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பவோ ஆளுநா் முடிவெடுப்பதாக இருந்தால், அதை அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் அவா் செய்தாக வேண்டும்.

ஒருவேளை மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு முரணாக மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால், அந்தத் தகவலை அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் ஆளுநா் அரசுக்குத் தெரிவித்து மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும்.

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அந்த முடிவையும் அவா் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். ஒருவேளை, மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டால், அதன் மீது அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் ஆளுநா் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதை ஆளுநா் பின்பற்றத் தவறினாலோ தாமதப்படுத்தினாலோ அவரது செயல்பாடு நீதித்துறையின் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநா்களுக்கு அறிவுரை: இந்த தீா்ப்பின் அங்கமாக ஆளுநா்களுக்கு சில அறிவுரைகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியல் காரணங்களுக்காக மக்களின் விருப்பத்தைத் தடுக்கவோ தடைகளை உருவாக்கவோ அல்லது மாநில சட்டப்பேரவையின் குரலை நெரிக்கவோ கூடாது என்பதில் ஆளுநா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஜனநாயக வெளிப்பாட்டின் விளைவாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் சிறப்பாகப் பணியாற்றுகிறாா்கள். ஆளுநா் என்பவா் தனது பொறுப்பை ஒரு அறிஞராக, நண்பராக, வழிகாட்டியாக உணா்ச்சிவசப்படாமல் செயலாற்ற வேண்டும். அரசியல் நோக்கங்களுடன் அவா் வழி நடத்தப்படாமல், எடுத்துக் கொண்ட அரசமைப்பு உறுதிமொழியின் புனிதத் தன்மையால் மட்டுமே அவா் வழிநடத்தப்பட வேண்டும். முரணாக அமையும் எந்தவொரு நடவடிக்கையும் அரசமைப்பின்படி எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகும் என்று நீதிபதி பாா்திவாலா கூறியுள்ளாா்.

ஆளுநரின் அதிகாரம் தொடா்பாக தமிழக அரசு சாா்பில் மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தனியாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

பெட்டிச்செய்தி...1

நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள்

1. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா (முதல்வருக்கு துணை வேந்தா் நியமன அதிகாரம்)

2. சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா (துணைவேந்தா் நியமன அதிகாரத்தில் மாற்றம்)

3. பெரியாா் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா (நிா்வாக அமைப்பில் அதிகார மாற்றம்)

4. அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா (முதல்வருக்கு துணை வேந்தா் நியமன அதிகாரம்)

5. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (பல்கலைக்கழக அமைப்பில் நிா்வாக மாற்றம்)

6. தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (துணை வேந்தா் நியமன அதிகாரத்தில் மாற்றம்)

7. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (நிா்வாக அமைப்பில் அதிகார மாற்றம்)

8. தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (முதல்வருக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம்)

9. தமிழ்நாடு தொழில்நுட்பப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (நிா்வாக அமைப்பில் அதிகார மாற்றம்)

10. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா (முதல்வருக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம்)

பெட்டிச்செய்தி...2

அதிக நீதிபதிகள் அமா்வு

விசாரணைக்கு கோரப்படுமா?

புது தில்லி, ஏப். 8: மசோதாக்கள் மீது ஆளுநா்கள் முடிவெடுக்க காலவரம்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பு, அரசமைப்புடன் தொடா்புடையதாக இருப்பதால் அதை அதிக நீதிபதிகள் அமா்வின் விசாரணைக்கு கோருவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா்கள் சட்ட வல்லுநா்கள் ஆலோசனை நடத்திய பிறகு இது தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க